தற்போது பரவி வரும் இன்புளுவன்சா போன்ற வைரஸ் நோய்களுக்கு வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வதினை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக காய்ச்சல் காணப்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் களுபோவில போதனா வைத்தியசாலையின் உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு இன்புளுவன்சா வைரஸ் காற்றில் வேகமாகப் பரவும் என்பதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நாட்களில் இருமல் அல்லது சளி இருந்தால், முகக்கவசங்களை அணியுமாறும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.