அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி முதலீடு மற்றும் நிதி சேவைகளுக்கான நிறுவனம், சிட்டி குரூப் (Citigroup).
இந்நிறுவனத்தில் உலகெங்கும் 2,39,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இதன் காலாண்டு நிதி அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் அந்நிறுவனம் சுமார் $1.8 பில்லியன் தொகை நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறுஇருக்கையில் சிட்டி குரூப், வரும் இரண்டாண்டுகளில் தனது பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை (10 சதவீதம் பேர்) பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.
சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஜேன் ஃப்ரேசர் (Jane Fraser), "2024 முக்கிய ஆண்டாக இருக்கும். நிறுவனத்தில் பல சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"பணிநீக்க நடவடிக்கை ஒரு கடினமான செயல்தான். ஆனாலும், 2026 இறுதியில் 1,80,000 பேர் மட்டுமே பணியாற்றும் நிறுவனமாக சிட்டி குரூப் மாற்றப்படும்" என இதன் தலைமை நிதி அதிகாரி (CFO) மார்க் மேசன் (Mark Mason) தெரிவித்தார்.
அத்தோடு வங்கி துறையில் அமெரிக்காவின் பெரும் வங்கிகளில் முதல் 5 இடங்களில் உள்ளது சிட்டி.
அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்குகள் 1.4 சதவீத சரிவை சந்தித்தன.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் பல துறைகளில் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் தனியார் வங்கி துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.