சுமார் 245 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 06 பேரை ஹிக்கடுவைக்கு மேற்கே ஆழ்கடலில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கவிந்து 01 என்ற ஆழ்கடல் படகிலேயே இந்த போதைப்பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டதாகவும் கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆழ்கடலில் இந்தப் படகை கடற்படையினர் கைப்பற்றி, நேற்று காலி கடற்படை முகாமுக்கு கொண்டு வந்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் படகில் 150 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும், 28 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளும் இருந்தன. இவற்றின் பெறுமதி 3,190 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதெனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவர் கொஸ்கொட மற்றும் பேருவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் இருவர் காலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்றும் ஒருவர் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 28, 66, 56 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று காலி கடற்படை முகாமுக்குச் சென்று கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பார்வையிட்டார்.