காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி..!!

tubetamil
0

 

அதிக பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்குடனான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளியை அதிகாரி ஒருவர் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே காசாவில் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. மறுபுறம் இரண்டு மாத போர் நிறுத்தம் ஒன்றுடன் தொடர்புபட்ட உடன்படிக்கை ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்திருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த திங்கட்கிழமை மொத்தம் 24 படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டானியல் ஹகரி நேற்று தெரிவித்தார். இதில் மத்திய காசாவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் 21 படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மற்றைய மோதல்களில் மேலும் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவ பேச்சாளரின் கூற்றுப்படி, கடந்த திங்கட்கிழமை மாலை காசாவில் உள்ள இரு மாடிகள் கொண்ட இரு கட்டடங்களுக்கு இஸ்ரேல் படையினர் நுழைந்துள்ளனர். அந்தக் கட்டங்களை இடித்துத் தகர்க்க அந்தப் படையினர் கண்ணி வெடிகளை அங்கு புதைக்க ஆரம்பித்துள்ளனர்.

அப்போது பலஸ்தீன போராளிகள் நடத்திய ஆர்.பீ.ஜி. குண்டு தாக்குதலில் அந்த இரு கட்டடங்களுக்கு அருகில் இருந்த டாங்கி ஒன்று இலக்காகி உள்ளது. அதே நேரத்தில் இரு கட்டடங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு இடிபாடுகள் உள்ளே இருந்த வீரர்கள் மீது விழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இஸ்ரேலிய வீரர்கள் புதைத்த கண்ணி வெடிகளே வெடித்திருக்கக் கூடும் என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஹகரி குறிப்பிட்டார்.“கடைசி நேரம் வரை பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க நாம் போராடினோம்” என்று தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிவிப்பில் ஹகரி குறிப்பிட்டார். எனினும் இடிபாடுகளுக்குள் புதையுண்ட உடல்களை மீட்பது கடினமாக இருந்தது என்றும் அவர் சுட்டிப்பாட்டினார்.

காசாவின் பிரதான தெற்கு நகரான கான் யூனிஸில் தரைவழி நடவடிக்கைகள், மோதல் மற்றும் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக ஐ.நா மனிதாபிமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸில் இருக்கும் தமது தலைமையகங்கள் இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் கடுமையாக சூடு நடத்திய அதே நேரம் நான்காவது மாடி மீது ஷெல் குண்டு விழுந்துள்ளது. இதனால் அந்த செம்பிறை சங்க வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருந்த பலரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 195 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 354 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி நான்கு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை குறைந்தது 25,490 ஆக உயர்ந்துள்ளது. இதில் 70 வீதத்திற்கு அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். தவிர 63,354 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் பஞ்சம் மற்றும் நோய்களின் பரவல் தொடர்பில் ஐ.நா நிறுவனங்கள் எச்சரித்து வரும் சூழலில் அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள்தொகையில் 90 வீதத்தும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கழுதை வண்டியில் தனது உடைமைகளை ஏற்றியபடி பயணித்த அபூ இயாத் என்பவர், தாம் ஏழாவது முறையாக இடம்பெயர்வதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது கான் யூனிஸில் இருந்து எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரை நோக்கி பயணித்துள்ளார். காசாவில் சன நெரிசல் மிக்க பகுதியாக மாறி இருக்கும் ரபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக கணிக்கப்படுகிறது.

“நான் தெரியாத இடத்தை நோக்கி பயணிக்கிறேன். ரபாவுக்கு செல்லும்படி அவர்கள் கூறுகிறார்கள். எப்படி ரபாவுக்குச் செல்வது? அங்கே இன்னும் இடம் இருக்கிறதா?” என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர் குறிப்பிட்டார்.கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டு 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்தப் போர் வெடித்தது. இதில் 132 பணயக்கைதிகள் தொடர்ந்தும் காசாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் இதில் உயிரிழந்ததாக நம்பப்படும் 28 பணயக்கைதிகளும் அடங்கும்.

கடந்த நவம்பரில் எட்டப்பட்ட ஒரு வார போர் நிறுத்தத்தின்போது சுமார் 100 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய நிலையில் இருந்து பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பணயக்கைதிகளின் உறவினர்கள் கடந்த திங்களன்று இஸ்ரேலிய பாராளுமன்ற குழுக் கூட்டம் ஒன்றுக்கு இடையூறு செய்து அவசர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

“நீங்கள் இங்கே அமர்ந்து கொண்டிருக்குறீர்கள், அங்கே எமது பிள்ளைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்று பணயக்கைதியான டல் ஷொஹானின் தந்தையான கிளாட் கொர்ன்கோல்ட் கூச்சலிட்டதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான புதிய உடன்படிக்ைக ஒன்றை கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் ஊடாக ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பரிந்துரைத்திருப்பதாக அமெரிக்காவின் எக்சியொஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளியாகி இருக்கும் இந்த செய்தியில், முன்மொழியப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கை பல கட்டங்களில் முன்னெடுக்கப்படுவதோடு, இதில் விடுவிக்கப்படும் பலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பூர்த்தியாவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.

எனினும் இந்த முன்மொழிவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்பதோடு காசாவின் பிரதான நகரங்களில் இருந்து இஸ்ரேலிய துருப்புகளை குறைப்பது மற்றும் படிப்படியாக அங்கு குடியிருப்பாளர்கள் திரும்புவதற்கு அனுமதிப்பது பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் புதிய பணயக்கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எதிர்பார்த்து மத்திய கிழக்குக்கான வெள்ளை மாளிகை இணைப்பாளர் பிரெட் மக்கர்க், எகிப்து மற்றும் கட்டார் செல்லவிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்கும் இரு நாட்டுத் தீர்வையே அமெரிக்கா தொடர்ந்து நம்புவதாகவும் இந்த வன்முறையின் முடிவுறாத சுழற்சியில் இருந்து வெளியேற வழியாக அது இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் வெடான்ட் பமேல் குறிப்பிட்டார்.பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக மறுப்பதோடு ஜேர்தான் நதியில் மேற்கு நிலப்பகுதி அனைத்தினதும் பாதுகாப்பு கட்டுப்பட்டை இஸ்ரேல் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்தப் பகுதிக்குள் அனைத்து பலஸ்தீன நிலப் பகுதியும் உள்ளடங்கும்.

இரு போர் தரப்புகள் மற்றும் முக்கிய அரபு நாடுகளின் முன்னணி இராஜதந்திரிகளை பிரசல்ஸில் திங்கட்கிழமை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுத்தனர்.

“இரு நாட்டுத் தீர்வே ஒரே தீர்வாக இருப்பதோடு அதனை விரும்பாதவர்கள் கூட அதற்கு எந்த ஒரு மாற்றையும் முன்வைக்கவில்லை” என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பெர்போக் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காட்ஸ், எதிர்கால இரு நாட்டு தீர்வுத் திட்டம் பற்றி செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்துக் கொண்டதோடு, இஸ்ரேல் தற்போது பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலேயே கவனம் செலுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாதி, இரு நாட்டுத் தீர்வை இஸ்ரேல் நிராகரிப்பது எதிர்காலத்தில் பிராந்தியத்தில் மேலும் மோதல்களையே உருவாக்கும் என்றார்.காசா போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் செங்கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் புதிய சுற்று தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹூத்தி நிலத்தடி களஞ்சிம் ஒன்று அதேபோன்று ஏவுகணை மற்றும் கண்காணிப்பு திறன்களை இலக்கு வைத்து திங்கட்கிழமை இரவு எட்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தாக்குதல்களுக்கு பதிலளிக்காது மற்றும் தண்டிக்காது விட மாட்டோம் என்று ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் போருக்கு பதில் நடவடிக்கையாகவும் பலஸ்தீனர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவுமே செங்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஹூத்திக்கள் கூறுகின்றனர்.

யெமனின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ஆதரவு ஹூத்திக்கள் கடந்த நவம்பர் தொடக்கம் பிரதான கடல் பாதையான செங்கடல் வழியாகச் செல்லும் பல கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் படுகொலைகள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இஸ்ரேலிய கட்டளை மையம் ஒன்றின் மீது ஏவுகணைகளை வீசியதாக குறிப்பிட்டது.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top