ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று (01) ஏற்பட்ட பூகம்பத்தில் காணாமல் போன சுமார் 250 பேரைத் தேடி மீட்புப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
காணாமல் போனவர்கள் சுமார் 72 மணி நேரம் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது அந்த நேரமும் கடந்துவிட்டதால் அவர்களது நிலைமை குறித்துப் பெரும் கவலை எழுந்துள்ளது.
ரிச்டரில் 7 புள்ளி 6ஆகப் பதிவான அந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 92ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிக்கப்பட்டு 4,600ஆக உயர்ந்துள்ளது.
சுசூ, வஜிமா ஆகிய நகரங்களில் வீடுகளின் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்தப் பலகை வீடுகள் பூகம்பத்தின் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய அளவுக்குக் கட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரமும் தண்ணீருமின்றித் தவிக்கின்றனர்.நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீதிகள் சேதமடைந்ததால் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உதவிகளைக் கொண்டுசேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.