யுத்திக எனும் தேசிய போதைப் பொருள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உள்ளிட்ட இருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினரும், பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து கஞ்சா பொதி கடத்தி செல்லப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினரும், கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினரும் அவர்களது புலனாய்வு பிரிவினரும் குறித்த வாகனத்தை பின் தொடர்ந்த நிலையில் குறித்த வாகனம் முறிகண்டி பகுதியில் உள்ள வசந்தநகர் பிரதான வீதியில் திரும்பியுள்ளது.
குறித்த வாகனத்தை இடை மறித்து சோதனையிட்ட வேளை சாரதி உள்ளிட்ட இருவர் தப்பி சென்ற நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.
தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் வாகனத்தை சோதனையிட்ட போது, சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட இரண்டு கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
குறித்த பொதியில் காணப்பட்ட கஞ்சா சுமார் 3.75 கிலோவிற்கு அதிக எடை கொண்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா பொதியையும், கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், கைதான சந்தேகநபரையும் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேற்கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.