திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம், பழனி வழியாக பாலக்காடு வரை தினந்தோறும் 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே வழித்தடத்தில் மதுரையில் இருந்து கோவை செல்லும் ரெயிலும், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பழனி செல்லும் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒட்டன்சத்திரம், பழனி வழியாக செல்கிறது.
மேலும் இன்று காலை பாலக்காட்டில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது. பழனி ரெயில் நிலையத்தை கடந்து ஒட்டன்சத்திரம் நோக்கி காமாட்சிபுரம் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் உடைப்பு இருந்தது என்ஜின் டிரைவருக்கு தெரியவந்தது.
ரெயிலின் சத்தம் வித்தியாசமாக தென்படவே உடனடியாக ரெயிலை நிறுத்தி இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்குமாறு டிரைவர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்படி உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக ரெயிலை இயக்கி அந்த இடத்தில் இருந்து கடந்து சென்றது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு டிரைவரின் சாமர்த்தியத்தால் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 500 பயணிகள் உயிர் தப்பினர்.
அத்தோடு இந்த வழித்தடத்தில் இன்று மாலையில்தான் அடுத்தடுத்து 3 ரெயில்கள் இயக்கப்படும். எனவே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஒட்டன்சத்திரம் ரெயில்வே பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.