பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரின் போது காசாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையை வெளிகாட்டுவதற்காக தம் நாட்டு கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா மேற்கொண்ட துணிச்சலான செயற்பாட்டை பாராட்டுவதாக
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்போனீஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் மோதலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதராக உஸ்மான் கவாஜா கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரின் போது, இது குறித்த வாசகங்கள் அடங்கிய காலணியை அவர் அணிந்திருந்தார்.
குறிப்பாக 'அனைத்து உயிர்களும் சமம்" மற்றும் 'சுதந்திரம் ஒரு மனித உரிமை" என்ற வாசகங்கள் அவரது காலணியில் அச்சிடப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் வீரர்கள் தங்களுடைய சீருடையில் தனிப்பட்ட செய்திகளை அச்சிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து, அவ்வாறான வாசகங்களை காட்டுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்தது.
இந்தநிலையில், மனித விழுமியங்களுக்காக அவர் காட்டிய தைரியத்தை தாம் பாராட்ட விரும்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்போனீஸ் தெரிவித்துள்ளார்.