காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீன போராளிகளுடனான மோதல் உக்கிரமடைந்திருக்கும் சூழலில் அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.
போர் ஆரம்பத்தில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு கடல், தரை மற்றும் வான் வழியாக உக்கிர தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய படை தற்போது தெற்கின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸை சுற்றிவளைத்துள்ளது.
காசாவில் நீடிக்கும் மோதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 183 பேர் கொல்லப்பட்டு மேலும் 377 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று (26) கூறியது.
இதன்மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,000 ஐ தாண்டியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பின்படி அங்கு 26,083 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 64,487 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.
குறுகலான காசா நிலப் பகுதியில் கான் யூனிஸ் மற்றும் ஏனைய பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் நிலை குறித்து சர்வதேச அளவில் கவலைகள் அதிகரித்தபோதும் அங்கு தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஆயுதக் கிடங்குகள், செயற்பாட்டு மையங்கள், கண்காணிப்பு நிலைகள் மற்றும் டாங்கி எதிர்ப்புத் தளங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டது.அரபு ஊடகத்திற்கான இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் அவிசாய் அன்ட்ராயி, கான் யூனிஸில் கடும் மோதல் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டபோதும் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் குறித்து எதுவும் கூறவில்லை.காசா நகரின் புறநகர் பகுதியில் மேலும் வடக்காக, மனிதாபிமான உதவி விநியோகத்திற்கு காத்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த வியாழனன்று 20 பேர் கொல்லப்பட்டு மேலும் 150 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.
“உண்பதற்கு ஒன்றும் இல்லாதபோதும் உணவு மற்றும் மாவை பெறுவதற்காக மக்கள் சென்றுள்ளனர்” என்று காயமடைந்தவர்களில் ஒருவரின் சித்தப்பாவான அபூ அத்தா என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“திடீரென்று டாங்கிகள் தோன்றி அங்கிருந்தவர்கள் மீது சுட ஆரம்பித்துள்ளன. அங்குள்ளவர்கள் துண்டுகளாக சிதறியுள்ளனர்” என்றும் அவர் விபரித்தார்.
காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பெரும் போர் குற்றம் என்று காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டிருப்பதோடு அங்கு இயங்கும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாம் அமைப்பு “செல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களாலேயே” இவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
இதேவேளை மத்திய காசாவை இலக்கு வைத்து இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
சவைதி சிறு நகரில் குடியிருப்பு ஒன்றை இலக்கு வைத்து இடம்பெற்ற தாக்குதலில் குழந்தை ஒன்று உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தவிர நுஸைரத் அகதி முகாமின் மேற்கில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக கான் யூசிஸ் நகரில் உள்ள ஐ.நா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சர்வதேச சட்டங்களை மதிக்கும்படி இஸ்ரேலுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தாக்குலுக்கு அமெரிக்கா ஏற்கனவே கண்டனம் வெளியிட்டிருந்தது. எனினும் இதற்கு இஸ்ரேல் மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை.
இந்த முகாம் மீது செல் தாக்குதலே இடம்பெற்ற நிலையில் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காசாவில் ஹமாஸ் ஆட்சி புரிந்தபோதும் அங்கு இஸ்ரேல் இராணுவம் மாத்திரமே டாங்கிகளை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
கான் யூனிஸில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் மக்கள் மேலும் தெற்காக எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவை நோக்கிய வெளியேற ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே காசாவில் அதிக சனநெரிசல் மிக்க பகுதியாக மாறியிருக்கும் ரபா பகுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றிருப்பதோடு அங்குள்ள தற்காலிக முகாம்களில் மக்கள் நிரம்பி வழிகின்றனர். கார்கள், கழுதை வண்டிகள் மற்றும் இழுவை வண்டிகளிலும் கால் நடையாகவும் மக்கள் மேலும் தெற்காக பயணித்து வருகின்றனர். “நான் எங்கே செல்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவ்வாறு பயணிக்கும் மூசா அபூ யுஸப் குறிப்பிட்டார். “என்னுடன் போர்கள், விரிப்புகள், கூடாரங்கள் என்று எதுவும் இல்லை” என்றார்.
இஸ்ரேலின் சரமாரித் தாக்குதலுக்கு மத்தியில் காசாவின் 2.4 மில்லின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் முற்றுகை மற்றும் தாக்குதல்களால் அங்கு உணவு, நீர், மருந்து மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் காசாவில் பிடிபட்டிருக்கும் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவுக்கு உதவிகள் செல்லும் இஸ்ரேலின் கெரெம் ஷெலோம் எல்லை கடவையை மூன்றாவது நாளாகவும் முடக்கியுள்ளனர்.
இதேவேளை போர் நிறுத்த முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் விரைவில் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இஸ்ரேல் மற்றும் எகிப்து உளவுப் பிரிவு தலைவர்கள் மற்றும் கட்டார் பிரதமரை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பர்ன்ஸ் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோதும் அமெரிக்க உளவுப் பிரிவு மற்றும் வெள்ளை மாளிகை அவரது பயணத் திட்டத்தை உறுதி செய்ய மறுத்துள்ளன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போரில் தொடர்ந்து 132 பயணக்கைதிகள் காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பது மற்றும் அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீனர்களை விடுவிப்பது மற்றும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.