ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் சர்வதேச கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அமெரிக்கா செங்கடலில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 19-ந்தேதியில் இருந்து 23 தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
கடந்த ஒருசில தினங்களுக்கு முன் கப்பல் மீது தாக்குதல் நடத்த வந்த ஹவுதியின் மூன்று படகுகளை அமெரிக்க கப்பற்படை தாக்கி அழித்தது. இதில் 10 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்போம் என ஹவுதி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அறிவித்துள்ளன.
இத் தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்காவின் உயர்அதிகாரி விரிவாக தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹவுதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்று இணைந்துள்ளன.