கொழும்பில் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இளையராஜாவின் புதல்வி பாடகி பவதாரிணி மரணமடைந்ததை அடுத்து, இந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர். இந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இசை நிகழ்ச்சிக்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை மீண்டும் அதற்கான திகதி அறிவிக்கப்படும் போது பயன்படுத்த முடியுமென்றும் இசை ரசிகர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
பாடகி பவதாரிணியின் பூதவுடல் நேற்றையதினம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு வந்ததுடன், அவர்கள் பவதாரணியின் பூதவுடலை பொறுப்பேற்று நேற்று சென்னைக்கு கொண்டு சென்றனர். இசைஞானி இளையராஜாவும் நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.