யெமன் கடலுக்கு அப்பால் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜிப்ரால்டர் ஈகள் என்ற அந்தக் கப்பலில் இருப்பவர்களில் எவருக்கும் காயம் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படவில்லை என்று மத்திய கிழக்குக்கான அமெரிக்க இராணுவ கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடனான அந்தக் கப்பல் அதென் குடாவை நோக்கிய பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த நவம்பர் தொடக்கம் செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
செங்கடலில் உள்ள அமெரிக்க போர் கப்பல் மீது ஹூத்திக்கள் நேரடி தாக்குதல் நடத்தி சில மணி நேரத்தின் பின்னரே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக யெமனின் ஹூத்திக்களின் இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரு முறை தாக்குதல் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.