இந்திய தமிழ் வம்சாவளியினர் மலையகத்தில் முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டின் நிறைவு நாளில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராதாகிருஷ்ணன் எம்.பி. இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது..
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்றபோது அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கு அதிக பங்களிப்பைச் செய்த நாடு இந்தியா என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே, எங்களுடைய இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்கின்றார்கள். அவர்களில் அநேகமானவர்கள் இன்று பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள்
எனவே, அவர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன் வர வேண்டும்.
மேலும் அப்படி முதலீடு செய்வதற்கு முன்வருகின்றவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
குறிப்பாக இலங்கையின் மலையகப் பகுதிகளில் அதாவது அதிகமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் தங்களுடைய முதலீடுகளைச் செய்ய முன்வருவார்களானால் எங்களுடைய மக்களுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அது ஓர் உந்துசந்தியாக அமையும்.
இலங்கையில் எங்களுடைய மலையக இளைஞர், யுவதிகளுக்கு அனைத்துத் திறமைகளும் உள்ளன.
ஆனால், அவர்களுக்குச் சந்தர்ப்பம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. பொருளாதார ரீதியாக நாங்கள் பின்னடைந்தவர்களாகவே இருக்கின்றோம்.
அத்தோடு எங்களுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இங்குள்ள அதாவது இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள முதலீட்டாளர்கள் முன்வருவார்களானால் அது இந்த மாநாட்டுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.