காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்தார்.
காலி சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு இடையில் மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் மேலும் 8 கைதிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் கடந்த 03 ஆம் திகதி மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கைதி காய்ச்சல் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
உயிரிழந்த கைதி கொட்டவகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில்,காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.