இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான புதிய உடன்படிக்கையின் கீழ் காசாவுக்கு உதவி வாகனங்கள் சென்றடைந்தபோதும் அங்கு அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் இந்த உதவிகள் போதுமானதாக இல்லை என்று தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கட்டாரின் மத்தியஸ்தத்துடன் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது தொடக்கம் கடந்த இரு தினங்களில் குறைந்தது 10 டிரக் வண்டிகள் காசாவை சென்றடைந்துள்ளன. இதில் பலஸ்தீன போராளிகளின் பிடியில் உள்ள பணயக்கைதிகளுக்கான மருந்துகளுக்கு பகரமாக பொது மக்களுக்கான மருந்து மற்றும் ஏனைய உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
எனினும் உணவு மற்றும் உதவி பொருட்களை பெறுவதற்காக பாதி நாட்கள் பெரும் எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் வரிசையில் காத்துள்ளனர். மனிதாபிமான உதவிகள் மிகக் குறைவாக வரும் சூழலில் காசாவுக்குள் இடம்பெயர்ந்திருக்கும் 1.9 மில்லியன் மக்களுக்கான உதவிகளை விநியோகிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வடக்கு காசாவில் நிலைமை மேலும் மோசமடைந்திருப்பதோடு அங்கு கடுமையான பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதுமான உணவு இல்லாததோடு தண்ணீரும் மாசுபட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் தற்போது எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபா பகுதியில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
62 சதுர கிலோமீற்றர் பகுதியைக் கொண்ட ரபாவில் ஒரு சதுர கிலோமீற்றர் பகுதியில் 16,000க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய நகரங்களை விடவும் சனநெரிசல் மிக்கதாக உள்ளது.
காசாவில் பஞ்சம் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அங்குள்ள 93 வீதமான மக்கள் பட்டினியை அனுபவிப்பதாக உலக உணவுத் திட்டம் கணித்துள்ளது. நோய்கள் வேகமான பரவி வருகின்றன. எதிர்வரும் மாதங்களில் நோய் மற்றும் பட்டினியால் உயிரிழப்போர் எண்ணிக்கை போரினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.மறுபுறம் காசாவில் இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக நடத்தும் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு பகுதி என அடையாளப்படுத்திய ரபாவில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமான கடந்த புதன்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களை பெரும்பான்மையாகக் கொண்ட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குடியிருப்பாளர்கள் வசித்து வந்த அல் சமிலி குடும்ப வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் தரப்புகளை மேற்கோள் காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியுள்ளது.
தமது குடும்ப வீடு தாக்குதலுக்கு உள்ளாகும்போது தாம் பாடசாலை ஒன்றில் அடைக்கலம் பெற்றிருந்ததாக கதீர் அல் சமிலி என்ற பெண் தெரிவித்துள்ளார். “எனது சகோதரரியின் மனைவி, அவரது குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று அவர் அல் ஜசீனா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய வலீத் அல் சமிலி, உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் இருப்பதாகக் கூறினார். “இதுவா இஸ்ரேலின் இலக்கு?” என்று கேள்வி எழுப்பினார்.
தெற்கு ரபா நகரின் ஸபுரா அகதி முகாமில் எல் ஹுத் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கு இடிபாடுகளில் இருந்து மீட்புக் குழுக்கள் மற்றும் அம்பூலன்ஸ் பணியாளர்கள் பல சடலங்களை கண்டுபிடித்திருப்பதோடு காயமடைந்த பலரையும் மீட்டுள்ளனர்.
மத்திய காசாவின் அல் மகாசி மற்றும் புரைஜ் அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளன. புரைஜ் முகாமில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான காசா மீதான தாக்குதல்களில் இதுவரை 24,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.
காசாவில் உள்ள பலஸ்தீன பல்கலைக்கழகத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் 300க்கும் அதிகமான கண்ணி வெடிகளை வைத்து தகர்த்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது காசாவில் இருந்த கடைசி பல்கலைக்கழகம் என்று யுரோ–மெட் மனித உரிமைகள் கணக்காணிப்புக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரமி அப்து தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேல் காசா பகுதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் 70 வீதமான பாடசாலைகளை அழித்துள்ளது” என்று அப்து எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார். “இது இனப்படுகொலை இல்லாவிட்டால் வேறு எதுதான் இனப்படுகொலை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. துல்கர்மான் நகரில் இஸ்ரேலிய படைகளால் பலஸ்தீன ஆடவர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இதில் 28 வயதான முஹமது தவாஸ் என்பவர் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியால் சுடப்பட்டிருப்பதாக வபா செய்தி நிறுவனம் கூறியது.
இதன்படி கடந்த இரு நாட்களில் துல்கர்மான பகுதியில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இதில் நால்வர் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
வடக்கு மேற்குக் கரையில் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களான துல்கர்ம் மற்றும் நூர் ஷம்ஸ் முகாம்கள் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த சுற்றிவளைப்புகளில் இஸ்ரேலிய இராணுவம் புல்டோசர்களை பயன்படுத்தி வீடுகள் மற்றும் உட்பட்டமைப்புகளை தகர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.