தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அநுராதா ஜயக்கொடி உயிரிழந்தனர்.
சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த நிலையில் அவரது மனைவி அநுராதா ஜயக்கொடியின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துரைக்கும் போதே அவரது அரசியல் நோக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
அவருக்கு நேர்ந்த அனர்த்தத்தை என்னாலும் எனது பிள்ளைகளாலும் நம்ப முடியவில்லை. கனவு போல் உள்ளது. அவரது மரணத்தின் சூடு தனிவதற்குள் நான் அரசியலில் ஈடுபடவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அப்படியான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் என்னிடம் யாரும் கேட்கவில்லை. நான் அரசியலுக்கு வருகிறேன் என இதுவரை எந்த ஊடகத்திலும் அறிக்கை விடவில்லை.
கணவரின் அரசியல் விவகாரங்களை கவனித்துக்கொள்கிறேன் என்ற ரீதியிலும், அவருடைய தனிப்பட்ட செயலாளராக செயல்பட்டேன்.
அரசியலுக்கு வரும் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இடத்தில் நின்று மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு புத்தளம் மாவட்ட மக்களும், நாட்டு மக்களும், கட்சித் தலைமையும் என்னைக் கேட்டால், அதுபற்றி நான் சிந்திக்க வேண்டி வரலாம்.
அத்தோடு எனது நான்கு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இப்போது உள்ளது. என்றார்