அண்டை நாடான ஈரான் மீது
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதல் இடம்பெற்று இரு நாட்களின் பின்னர் பாகிஸ்தான் நேற்று (18) இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
எல்லையில் உள்ள சிஸ்தானோ பலுகிஸ்தானில் “பயங்கரவாத மறைவிடங்கள்” மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள சிஸ்தான் பலுகிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் பல ஏவுகணைகள் தாக்கியதாகவும் குறைத்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரான ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தத் தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.
இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஈரான், டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்த தாக்குதல் தொடர்பில் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் பேச்சர் நாசர் கானி தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளினதும் எல்லை பகுதியில் தாக்குதல்களை நடத்தும் ஆயுதக் குழுக்களுக்கு அடைக்கலம் அளிப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு, உளவுத் தகவல்கள் அடிப்படையிலான இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டது.
இரு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக கூறிய பாகிஸ்தான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்ட நிலையிலேயே பாகிஸ்தான் இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக ஈரான் தாக்குதலை அடுத்து ஈரான் தூதுவர் பாகிஸ்தான் திரும்புவதை தடைசெய்த பாக். அரசு ஈரானுக்கான தூதுவரையும் திரும்பப் பெற்றது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் 959 கிலோமீற்றர் தூரம் கொண்ட எல்லை பகிர்ந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.