யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறைப் பகுதியில் இன்று (23) காலை இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும் மூவர் சிறியளவான காயத்துடனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை பேருந்தின் சாரதிகள் இருவரும் ஊர்காவற்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.30 மணியளவில் பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்து வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இரண்டு பேருந்துகளும் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன் காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்