இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரிக்கை..!!

tubetamil
0

 இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் படகுகளுடன் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாகவும் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை படகுகளுடன் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் அவர்களின் மீன்பிடிப்படகுகளுடன் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றமை தொடர்பாகவும் எனது ஆழ்ந்த வேதனையை தெரியப்படுத்துகின்றேன்.

நாகபட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 கடற்றொழிலாளர்களை அவர்களின் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் 15.01.2024 அன்று கைது செய்துள்ளதுடன், மற்றொரு சம்பவத்தில் இராமநாதபுரம், பாம்பன் இடத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை அவர்களின் இரண்டு விசைப்படகுகளுடன் 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடித் தொழிலை மாத்திரமே தமது வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடற்றொழில் சமூகத்தினரிடையே பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கியுள்ளது.

இவ்வாறான கைது நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்த வேண்டுமென்பதுடன், இலங்கையில் கட்டுப்பாட்டிலுள்ள படகுகளையும் விடுவிக்க உரிய காலஅவகாசத்தை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top