தெற்மேற்கு சிரியாவில் ஜோர்தான் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜோர்தான் எல்லையில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சுவைதா மாகாணத்தில் அர்மான் சிறு நகரில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் பல வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இது தொடர்பில் ஜோர்தான் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. போதைக் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் நிலைகளை இலக்கு வைத்து கடந்த காலங்களிலும் சிரியாவில் ஜோர்தான் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (18) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் ஒமர் தலாப் மற்றும் ருத்கி அல் ஹலபி ஆகிய இருவரின் வீடுகள் தாக்கி அளிக்கப்பட்டிருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தலாப், அவரது தாய் மற்றும் அத்தை ஆகியோரும் ஹலபி குடும்பத்தில் அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் உட்பட ஏழு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜோர்தானிய போர் விமானங்கள் சிரிய வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்திருப்பது இந்த ஆண்டில் இது மூன்றாவது முறையென மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.