டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் சாரட் வண்டில் வந்து பங்கேற்றார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. கடந்த 40 ஆண்டுகளில் இந்திய குடியரசு தலைவர் ஒருவர், குடியரசு தின நிகழ்ச்சிக்கு சாரட் வண்டியில் வந்து பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செங்கோட்டை பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 70,000 பாதுகாப்பு படையினர்பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் நாட்டின் பெண்களின் சக்தி மற்றும் ஜன நாயக கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சுமார் 90 நிமிடங்கள் நடை பெறும் குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளில் உள்ள பெண் படைப் பிரிவினர் பங்கேற்றிருக்கின்றனர். இராணுவத் தளவாடப் பிரிவில் முதன் முறையாக பணியமர்த்தப்பட்ட 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா, பிரியங்கா செவ்டா ஆகியோர் பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் குண்டுகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புடன் பங்கேற்றனர்.
வழக்கமாக இடம்பெறும் இராணுவப் பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்குப் பதிலாக 100-க்கும் மேற்பட்ட பெண் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், நகாடா போன்ற இந்திய இசை வாத்தியங்களை இசைத்தனர். இந்திய விமானப் படையைச் சேர்ந்த 15 பெண் விமானிகள் விமான சாகசங்களை நிகழ்த்தினர். அதேபோல 40 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பாரம்பரிய சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தார். சாரட் வண்டியில், சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் வந்த குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.