இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் கட்சிக்கும் புத்தளம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும்
அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
”சனத் நிஷாந்த புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்ட மக்களுக்காக உழைத்தவர் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். புத்தளம் மற்றும் சிலாபத்தில் இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கொழும்பு செல்லும் வழியில் அவர் இந்த விபத்தை சந்தித்துள்ளார்.
மே 9ஆம் திகதி அரகலய போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டது. எனவே புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத நிலையில், கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சனத நிஷாந்த கலந்துகொண்டார்” அவர் தெரிவித்தார்.
பொலிஸ் விசாரணைகளின் படி, இராஜாங்க அமைச்சரின் சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சனத் நிஷாந்த கட்சிக்கும் மாவட்டத்திற்கும் பெரும் பலமாக திகழ்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இராஜாங்க அமைச்சரின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்திற்கான நிலுவையிலிருந்த மின்கட்டணம் 2.6 மில்லியன் ரூபாயை செலுத்திய சம்பவம் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.