தெற்கு காசாவில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையின் தீவிரத் தன்மை குறைத்துக்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் அறிவித்தபோதும், காசாவெங்கும் நீடிக்கு இடைவிடாத தாக்குதல்கள் தொடர்வதோடு நூற்றுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் அதிகரித்துவரும் உயிரிழப்புகள் சர்வதேச அளவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் திங்கட்கிழமையும் மோதல்களை நிறுத்தும்படி அழைப்பு விடுத்திருந்தார்.“போதுமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், பரந்த போர் ஒன்று வெடிப்பதை தவிர்ப்பதற்கும் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று தேவையாக உள்ளது” என்று குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் தொடரும் போர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொந்தளிப்பு சூழலை ஏற்படுத்தி இருப்பதோடு இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்கள் செங்கடலில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய தரைப்படையின் மற்றொரு வீரர் கொல்லப்பட்டிருப்பதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.
தெற்கு காசாவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலிலேயே 21 வயதான அந்தப் படை வீரர் கொல்லப்பட்டுள்ளார். இதன்படி காசாவில் கொல்லப்பட்்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா மற்றும் தெற்கில் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களை இலக்கு வைத்து சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (15) செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், தீவிர நடவடிக்கைகள் விரைவில் முடித்துக்கொள்ளப்படும் என்றார்.
“தீவிர நடவடிக்கை கட்டம் சுமார் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்பதை நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்” என்று கூறிய கல்லன்ட் வடக்கு காசாவில் ஏற்கனவே அந்தக் கட்டத்தை அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
“தெற்கு காசாவில் இந்த அடைவை எட்டுவோம் என்பதோடு அது விரைவில் முடிவுக்கு வரும். இரண்டு இடங்களிலும் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தருணம் வரும்” என்று கூறிய அவர், அதற்கான கால எல்லை பற்றி குறிப்பிட்டு கூறவில்லை.
இதில் காசாவில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நான்கு படைப்பிரிவுகளில் ஒன்று அங்கிருந்து வாபஸ்பெறும் செயற்பாட்டை பூர்த்தி செய்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் திங்கட்கிழமை உறுதி செய்தது.எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள் காசா போர் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும் என்று எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசாவின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் கடந்த திங்கட்கிழமை இரவு குறைந்தது 57 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.
காசா நகரின் மத்திய அல் சப்ரா பகுதியில் உள்ள அல் சுசி குடும்பத்தினரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பல டஜன் பேர் காயமடைந்துள்ளனர்.
உக்கிர தாக்குதலால் அந்த வீடு தரைமட்டமாக்கப்பட்டிருப்பதோடு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அல் ஷிபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேபோன்று காசா நகரின் தெற்கில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஹதாத் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பல குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்தும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக உள்ளுர் தரப்புகளை மேற்கோள்காட்டி வபா செய்தி நிறுவனம் கூறியது.
குறிப்பாக ரபா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாய், தந்தை மற்றும் அவர்களின் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பம் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு கான் யூனிஸில் ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை முடிவுக்கு வந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 132 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு கூறியது. கடந்த நான்கு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் மார்க்கமான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 24,000ஐ தாண்டியுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உள்ளனர்.
இதேவேளை இரு இஸ்ரேலிய பணயக்கைதிகளுடையது எனக் கூறும் இரு சடலங்களை காட்டும் புதிய வீடியோ ஒன்றை ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்டது. இவர்கள் காசா மீதான வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது பலஸ்தீன போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகளில் 100க்கும் அதிகமானோர் தொடர்ந்து காசாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் குறைந்தது மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹெப்ரோனுக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய படையினருடன் மோதலில் ஈடுபட்ட இரு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் கூறியது. துல்கரமில் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில் 37 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் தொடரும் வன்முறைகளில் 350க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.