யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பிரபல மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்த பிரபல மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்துடன் தொடர்புடைய கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மருந்தகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
"யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் 1100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என விசாரணையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மேலும் இரண்டு பெட்டிகளில் சுமார் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மீதும் மருந்தகம் மீதும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்". என்று பொலிஸார் கூறினர்.