இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தாவின் விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் ஒன்று இருப்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தொடர்புடைய இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் மூன்றாவது வாகனம் ஒன்று விபத்தின்போது பயணித்ததாக கூறியதால், நெடுஞ்சாலை காவல்துறையிடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த (25) ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான காவல்துறை உத்தியோகத்தர் அனுராத ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் அவரது மரணம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
விபத்திற்குள்ளான ராஜாங்க அமைச்சரின் வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் சாரதிகளிடம் விசாரணை நடத்திய போது, வேகமான ஓட்டம், கவனக்குறைவு, மோசமான தெரு விளக்குகள் மற்றும் மூன்றாவது வாகனம் வழிவிடாமை என்பன, இந்த விபத்துக்கான காரணிகளாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது ராஜாங்க அமைச்சரின ஜீப் அதிவேகமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துள்ளதுடன் சில சமயங்களில் அந்த வேகத்துக்கும் மேலாகவும் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில் விபத்துக்குள்ளான ஜீப் வாகனத்தின் ஓட்டுனர்,வாகன விளக்குகளை ஒளிரச் செய்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதை தான் அவதானித்ததாக கனரக கொள்கலன் சாரதி தெரிவித்துள்ளார்.
தமக்கு பின்னால் இரண்டு வாகனங்களும் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதை உணர்ந்த அவர் தனது வாகனத்தை இரட்டைப் பாதை அதிவேக நெடுஞ்சாலையின் இடதுபுறமாக நகர்த்தியுள்ளார்.
இதன்போது முதலில் பயணித்த வாகனம், கனரக கொள்கலனைக் கடந்து சென்றபோது, அமைச்சரின் ஜீப் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் விமான நிலையத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுடன் பயணித்த காவல்துறை அதிகாரி ஒருவரே, விபத்தைப் பார்த்து முதலில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அத்தோடு அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கும், அவசர சேவை வாகனங்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை அமைச்சர் சனத் நிசாந்தவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் விபத்து இடிவுகளுக்குள் இருந்து வெளியேற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.