நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பெருமளவான சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் போசாக்கான உணவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், பெருந்தோட்டங்களில் உள்ள பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 35,000 மாணவர்கள் உள்ளடங்கலாக 100,055 மாணவர்கள் பயன்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் உணவுக்காக வழங்கப்படும், 60 ரூபாவை 100 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.