ஈராக்கின் அரை சுயாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய உளவுத் தலைமையகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிப் படை தெரிவித்திருப்பதோடு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக ஈரான் படை கூறியது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் பிராந்திய நாடுகளுக்கு பரவும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலிலேயே கடந்த திங்கட்கிழமை (15) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யெமனில் ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்கனவே தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“புரட்சிப் படை மற்றும் ஆதரவு படை தளபதிகளின் கொலைகளுக்கு காரணமான சியோனிச அரசின் அண்மைய அட்டூழியங்களுக்கு பதிலடியாக, ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள பிரதான மொசாட் உளவுத் தலைமையகங்களில் ஒன்று பலிஸ்டின் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டது” என்று ஈரான் புரட்சிப் படை குறிப்பிட்டுள்ளது. எனினும் எர்பிலில் குடியிருப்புப் பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்ட ஈரானின் தாக்குதலை கண்டிப்பதாக ஈராக் தெரிவித்துள்ளது. இதனை பொறுப்பற்றதும் துல்லியமற்றதுமான தாக்குதல் என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக குர்திஸ்தான் பிராந்திய பாதுகாப்புச் சபை கூறியது. இதில் கொல்லப்பட்டவர்களில் முன்னணி வர்த்தகரான பஷ்ரேவ் தியாசியும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர ஒரு ரொக்கெட் குண்டு மூத்த குர்திஷ் உளவு அதிகாரியின் வீட்டின் மீதும் மற்றொரு ரொக்கெட் குர்திஷ் உளவு மையம் மீதும் விழுத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து எர்பில் விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான் இதற்கு முன்னரும் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் மீது தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு அந்தப் பகுதியில் ஈரானிய பிரிவினைவாதக் குழுக்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு தளம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகிறது.
ஈரானின் அறிவிப்பு குறித்து இஸ்ரேலிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இதேவேளை சிரியாவின் வட மேற்கு நகரான அலெப்போ மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் மத்தியதரைக் கடல் திசையில் இருந்து வந்த நான்கு ஏவுகணைகள் தாக்கியதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் கூறியது.ஈரானில் இந்த மாதம் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகஈரான் புரட்சிப்படை குறிப்பிட்டது. தெற்கு ஈரானில் இடம்பெற்ற அந்த தற்கொலை தாக்குதலில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.