இஸ்ரேலின் உளவு நடவடிக்கையுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட நால்வருக்கு ஈரானில் நேற்று (29) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களின் உச்ச நீதிமன்ற மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஈரானிய அரச ஊடகம் கூறியது. இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவின் உத்தரவின்படி குண்டு வைக்க முயன்றதாகவே இந்த நால்வர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆயுதப் படைகளுக்கான தளபாடங்களை உற்பத்தி செய்யும் மத்திய நகரான இஸ்பஹானில் உள்ள தொழில்சாலை ஒன்றை தாக்குவதற்காக இவர்கள் ஈராக்கின் வடக்கு குர்திஷ் பிராந்தியத்தில் இருந்து ஈரானுக்கு சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2022 கோடைகாலத்தில் இந்த நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும் ஈரான் உளவுப் பிரிவு இதனை முறியடித்துள்ளது.
கடந்த டிசம்பர் பிற்பகுதியிலும் இஸ்ரேலின் மோசாட்டுடன் தொடர்புபட்டதாக கூறி ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்டவர் மீது ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.