பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடியவகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, திகன சம்பவத்துக்கு பின்னர் ஒரு வாரத்துக்கு சமூக வலைத்தளங்களை நான் முடக்கியிருந்தேன். அவ்வாறு முடக்கியிருக்காவிடின், நாடு முழுவதும் கலவரம் வெடித்திருக்கும் என்றார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஊடகங்களுக்கு முகாமைத்துவமும், ஊடக கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சட்டதிட்டங்கள் கடுமையானதாக இருந்தாலும் ஊடகங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகள் அவசியமாகும்.
இந்த இடத்தில் சில விடயங்களை கூற வேண்டும். எனது மூத்த மகளின் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர். அரிசி, தேங்காய் போன்ற சமையறையில் இருந்த பொருட்களையே கொண்டு சென்றுள்ளனர். எனக்கு கட்டாரில் அரச தலைவருக்காக வழங்கப்பட்ட பரிசொன்றை பொலன்னறுவை நூதனசாலையில் வைத்துள்ளேன். ஆனால் ஊடகமொன்றில் காலையில் பத்திரிகை செய்தி வாசிக்கும் போது அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பரிசை தனது மகளின் வீட்டில் வைத்திருந்தாக கூறியுள்ளார்.
அது பொய்யாகும். நான் நூதனசாலையிலேயே எனக்கு கிடைத்த பொருட்களை வைத்துள்ளேன். ஆனால் ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தவறானவையாக உள்ளன. இதனை மாற்ற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.