பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸின் நிபந்தனையை இஸ்ரேல் பிரதமர் நிராகரிப்பு..!!

tubetamil
0

காசா போரின் மையப் பகுதியாக மாறியிருக்கும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேலிய இராணுவம் நேற்றும் குண்டு மழை பொழிந்த நிலையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் அமைப்பு விடுத்த நிபந்தனையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

எனினும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்ப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு வரும்படி கோரி இஸ்ரேலுக்குள் நெதன்யாகுவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கான் யூனிஸில் ஞாயிறு இரவு தொடக்கம் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று உயிர்ச்சேதங்கள் அதிகரித்து வருவதோடு இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே தீவிர மோதல் நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதை இஸ்ரேல் நிராகரித்ததால், பணயக்கைதிகள் வீடு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான சமி அபூ சுஹ்ரி தெரிவித்துள்ளார்.



“எமது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக, போரை முடிவுக்குக் கொண்டுவந்து எமது படைகளை காசாவில் இருந்து வாபஸ் பெறும்படியும் அனைத்து கொலைகாரர்கள் மற்றும் கற்பழிப்பாளர்களை விடுவிக்கும்படியும் ஹமாஸ் கோருகிறது” என்று நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஹமாஸை அப்படியே விட்டுவிடும்படியும் கோருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. “கொடிய ஹமாஸிடம் சரணடையும் நிபந்தனைகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன்” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போதே சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். எனினும் கடந்த நவம்பரில் கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கையில் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு பகரமான இஸ்ரேல் சிறையில் இருக்கும் 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சுமார் 136 பணயக்கைதிகள் காசாவில் உள்ள நிலையில் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நெதன்யாகு அரசுக்கு இஸ்ரேலுக்குள் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பணயக்கைதிகள் மற்றும் காணாமல்போனோரது குடும்பங்களின் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பொதுமக்கள், படையினர் மற்றும் ஒக்டோபர் நிகழ்வில் கடத்தப்பட்ட ஏனையவர்களை நாம் கைவிட மாட்டோம் என்பதை நெதன்யாகு குறிப்பிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாம் மேம்பட்ட உடன்படிக்கை ஒன்றுக்கு தற்போது வர வேண்டும். பணயக்கைதிகளை தியாகம் செய்ய பிரதமர் தீர்மானித்திருந்தால், அவர் தலைமைத்துவத்தை காண்பித்து இஸ்ரேலிய மக்களுடன் நேர்மையாக தனது நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பணயக்கைதிகளின் உறவினர்கள் உடன் நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்தினர்.

“அவர்கள் உருவாக்கிய சிக்கலை சரிசெய்து, இந்த பணயக்கைதிகளை உடனடியாக வீட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பணயக்கைதியான ஹெர்ஷ் கோட்பேர்க் போலினின் தந்தை ஜோன் போலின் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் வெளிப்படை அறிக்கை

இந்தப் போரைத் தூண்டிய ஒக்டோபர் 7 தாக்குதல் தொடர்பில் முதல் முறை வெளிப்படையாக பேசி இருக்கும் ஹமாஸ் அமைப்பு, அதில் சில தவறுகள் இருந்தபோதும் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் அங்கமாக அந்தத் தாக்குதல் இருந்தது என்று தெரிவித்துள்ளது.

பலஸ்தீன் நிலங்களில் இஸ்ரேலிய ஆக்கிமிப்புக்கு எதிராகவும், பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கான வழியாகவும் ஓக்டோபர் 7 தாக்குதல் அவசியமான நடவடிக்கையாக இருந்தது என்று ஹமாஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் 16 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7 தாக்குதலின்போது 1,200 பேர் வரை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது. “பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்ட ஏதேனும் சம்பவம் இருந்தால், அது தற்செயலாக மற்றும் ஆக்கிரமிப்பு படைகளுடன் மோதலின் போது நடந்தது” என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

“குழப்பத்தில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் பொலிஸாரால் பல இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் நேற்று சூரியோதயத்திற்கு முன்னிருந்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரித் தாக்குதல்களில் ஈடுபட்டன. குறிப்பாக தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் கடும் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. இதில் அங்கு போர் ஆரம்பித்தது தொடக்கம் இல்லாத அளவு நேற்று முன்தினம் இரவில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

கான் யூனிஸின் தென் பகுதியில் உள்ள கிசான் ரிஷ்வான் பகுதியில் பல வீடுகள் மீது விழுந்த ஷெல் குண்டுகளில் அந்தப் பகுதி தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கான் யூனிஸில் இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

முன்னதாக வடக்கு காசாவில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தபோது பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயமாக இஸ்ரேலால் அறிவிக்கப்பட்ட கான் யூனிஸ் தற்போது பெரும் அழிவுகளை சந்தித்துள்ளது. அங்குள்ள நாசர் மருத்துவமனை மற்றும் எல் அமல் நகர மருத்துவமனைக்கு அருகில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நகரில் உள்ள காசாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமும் இலக்கு வைக்கப்படுவதாக அங்குள்ள அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதியில் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக தாக்குதல்கள் நீடிப்பதால் மக்களுக்கு தப்பிச் செல்வதற்கான வழிகளும் இல்லாமல் உள்ளன.

ஆளில்லா விமானங்கள் நகரெங்கும் சுற்றித் திரிவதோடு நகரும் அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

காசாவில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வரும் இடைவிடாத தாக்கதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டி இருப்பதோடு இதில் 70 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பை முற்றாக ஒழிப்பதாக நெதன்யாகு சூளுரைத்தபோதும், போர் ஆரம்பித்தது தொடக்கம் அந்த அமைப்பு இதுவரை 20–30 வீதமான போராளிகளையே இழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் கணித்துள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த உளவு அறிக்கையில், இஸ்ரேலிய துருப்புகளுடன் போராடும் திறனையும் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தும் திறனையும் ஹமாஸ் தொடர்ந்து பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும்போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் சூழலில் தினசரி தாக்குதல்களுக்கு மத்தியில் உணவு, நீர் மற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு பஞ்சம் மற்றும் நோய் பரவல் குறித்து ஐ.நா நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளுடன் 260 லொறிகள் காசாவை அடைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது. எனினும் இது போருக்கு முந்தைய நிலையை விடவும் மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.

பிராந்திய பதற்றம்

இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் லெபனான் எல்லையை ஒட்டிய வடக்கு இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் எச்சரிக்கையாக சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இஸ்ரேலிய படை மற்றும் லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பேராளிகளுக்கு இடையே கிட்டத்தட்ட தினசரி மோதல் நீடிப்பதோடு தெற்கு லெபனானின் பல இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேலின் இவ்வாறான வான் தாக்குதல் ஒன்றில் ஹிஸ்புல்லா போராளி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது. அங்கு இஸ்ரேலிய இராணுவம் தினசரி சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டு வருவதோடு ஜெரூசலம், ஹெப்ரோன் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற புதிய சுற்றிவளைப்புகளில் மேலும் 15 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் ஆறாயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு குறைந்து 370 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

செங்கடலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது யெமன் ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பதில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. சிரியா மற்றும் ஈராக்கிலும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. கட்டாரை தளமாகக் கொண்டு இயங்கும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே, கடந்த ஞாயிறன்று துருக்கி வெளியுறவு அமைச்சரை சந்தித்து மோதல் மற்றும் மனிதாபிமான உதவி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் காயத்திற்கு உள்ளான அப்தல் ரஹ்மான் இயாத், எகிப்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரான்ஸின் கடற்படை கப்பலான டிக்ஸ்முட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடக்கும்போது வீட்டை விட்டு தன்னால் வெளியேறுவதற்கு நேரம் இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் எனது பெற்றோர், எனது சகோதரர், எனது சகோதரி, எனது இரண்டாவது சகோதரி மற்றும் அவளது கணவர் மற்றும் அவர்களின் மகளுடன் இருந்தேன். நான் மட்டும் தான் உயிர் தப்பினேன்” என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு இயாத் கூறினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top