ஹங்வெல்லையைச் சேர்ந்த இருவர், பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் தாலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றபோது, அவ்விருவரையும் பிடித்த பிரதேசவாசிகள், நையப்புடைத்து பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்விரு சந்தேகநபர்களிடமும் போதைப்பொருள்கள் இருந்துள்ளன அவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிரிட்வெல் தோட்டத்தில் இருந்து பொகவந்தலாவை நகருக்கு சென்றுக்கொண்டிருந்த இளம் பெண்ணின் தாலியை, புதன்கிழமை (10) பறித்துக்கொண்டே இவ்விருவரும் தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதான இவ்விருவரும், மோட்டார் சைக்கிளில் பொகவந்தலாவைக்கு வந்துள்ளனர். பொகவந்தலாவை நகருக்கு செல்வதற்கு முன்னர்,பலாங்கொடைக்கு செல்வதற்கான வீதியை கேட்டறிந்துகொண்ட இருவரும், பிரிட்வெல் தோட்டத்துக்குள் மோட்டார் சைக்கிளை தவறுதலாக செலுத்திவிட்டனர்.
அந்த தோட்ட வீதியில் கொஞ்ச தூரம் பயணித்த போது, எதிர்திசையில் வந்துக்கொண்டிருந்த பெண்ணின் தாலியை அபகரித்துள்ளனர். அப்போது அப்பெண் அபாயக்குரல் எழுப்பி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
என்ன செய்வதென்ற தெரியாத அவ்விருவரும் பயத்தில், தோட்டத்துக்குள்ளே மோட்டார் சைக்கிளை செலுத்திவிட்டனர். ஒன்றுகூடிய பொதுமக்கள், ஒருவரை பிடித்துள்ளனர். சைக்கிளை விட்டுவிட்டு தப்பியோடிய மற்றுமொரு நபர், தேயிலைத் தோட்டத்தில் ஒளிந்திருந்த நிலையில் பொதுமக்கள் பிடித்துள்ளனர்.
அவ்விருவரையும் ,நையப்புடைத்து கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவ்விருவரையும் சோதனைக்கு உட்படுத்திய போது, அவர்களிடம் போதைப்பொருள் பக்கற்றுகள் இரண்டு, அலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்விருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்விருவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (11) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.