கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் குழம்பி தவிக்கும் பயணிகள்

keerthi
0

 


சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.

அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது என சொல்லப்படுகின்றது.

அத்தோடு    பஸ் நிலையத்தின் உள்ளே நுழைய மாநகர பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு பஸ்களுக்கு தனித்தனி வாயில்கள் உள்ளன. மேலும் இந்த 2 பஸ்களும் நிறுத்தும் இடங்களுக்கு இடையேயான தூரம் அதிகம் உள்ளதால் வெளியூர்களில் இருந்து அதிக உடைமைகளை கொண்டு வரும் பயணிகள் மாநகர பஸ்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.  மேலும்   அவர்கள் குடும்பத்தினருடன் எங்கே செல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது.

அத்தோடு      பஸ் நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் பேட்டரி கார் வசதி உள்ள நிலையில் அவை அதிகாலை நேரத்தில் பயன்பாட்டில் இல்லை. இதனால் பயணிகள் அவதி அடையும் நிலை உள்ளது.

மேலும் சில பயணிகள் விரைவு பஸ்களில் ஏற்கனவே கோயம்பேடு வரை டிக்கெட் முன்பதிவு செய்து உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்படுவதால் அவர்கள் டிரைவர், கண்டக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலையில் 2-வது நாளாக சில பயணிகள் கண்டக்டரிடம் இதுபற்றி கேட்டு கேள்வி எழுப்பினர்.

இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பயணிகள் ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி. சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் நடை மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட வேண்டும். இல்லையெனில், பஸ் நிலையம் முழுமையாக செயல்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை ஏற்படும்.

இதேபோல் சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைவதால் வரும் நாட்களில் அதிக அளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இதில் தேவையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த இடம் மற்றொரு பெருங்களத்தூர் சந்திப்பாக மாறிவிடும் என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு வரை செல்ல கவுண்டரில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் பணம் பஸ்சிலேயே கண்ட க்டர் மூலம் திரும்ப வழங்கப்படும். 'ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திரும்பப்பெற சில நாட்கள் ஆகும் என்றார்.

பயணிகள் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலையம் போன்று கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இங்குள்ள ஒரு சில உணவகங்களைத் தவிர பெரும்பாலான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு தவிக்கும் நிலை உள்ளது. குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை. புதிய பஸ் நிலையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில் தொடரும் குழப்பத்தால் பொதுமக்களும், பயணிகளும் தவித்து வருகிறார்கள். பஸ் நிலையத்தில் இறங்குபவர்கள் விரைந்து மாநகர பஸ்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்றனர்.

சி.எம்.டி.ஏ.அதிகாரி ஒருவர் கூறும்போது, பஸ் நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பஸ்கள் எளிதில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும். ஜி.எஸ்.டி. சாலையில் பயணிகள் சாலையைக் கடக்கவும், பஸ்நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து சேரவும் அப்பகுதியில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்படுவார். அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top