விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு புத்தளம் மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட, ஜகத் பிரியங்கர தெரிவாகியுள்ளார்.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் மாவட்ட தலைவராக ஜகத் பிரியங்கர செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (26) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற திடீர் விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரான கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்தனர்.
முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினரான எல்.கே. ஜகத் பிரியங்கர, 2020 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 40,527 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தைப் பெற்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 5 ஆசனங்களை வென்றது.
1979 டிசம்பர் 09 இல் பிறந்த பிரியங்கர, திக்வெல்ல ஆரம்பப் பாடசாலையில் தனது கல்வியைத் தொடங்கினார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியில் நுழைந்தார். இவர் களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலை பட்டதாரி ஆவார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றுவதுடன் திறமையான பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட மட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
உள்ளூராட்சி சபை உறுப்பினராக செயற்பட்ட இவர் தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட தலைவராக செயற்பட்டார்.