தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா மதுரைக்கு தனி அடையாளத்தை தருகிறது.
பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்தநாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூர் ஆகிய இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
மேலும் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் நாளான வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்தில் தொடங்குகிறது.
ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ்கள் வழங்குவது வழக்கம்.
அதன்படி காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. காளைகளின் கொம்புகள் உயரம், பற்களின் எண்ணிக்கை, திமில் அளவு குறித்து அளவீடு செய்து கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
அத்தோடு போட்டியில் பங்கேற்கும் காளையின் வயது 3 முதல் 8-க்குள் உள்ளதா? என்றும் பரிசோதித்தனர். தகுதியுடைய காளைகளுக்கு படத்துடன் கூடிய தகுதி சான்றிதழ்களை மருத்துவ குழுவினா் வழங்கினா்.