திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி மாலை மீன் பிடிக்க சென்ற நிலையில் இன்று (30)அதிகாலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெவசிரி கம என்ற பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்தவர் கடந்த 28 ஆம் திகதி மாலை மூன்று மணியளவில் கந்தளாய் குளத்திற்கு தனியாக மீன் பிடிக்க சென்ற நிலையில் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை.
இவ்வாறுஇருக்கையில் உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் , இன்று அதிகாலை குளத்தின் கரையில் இருந்து 100 மீற்றர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.