இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..!

keerthi
0

 


இலங்கையில் இனம், மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு தீர்வுகளை காணுமாறு சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ, அன்றைய இலங்கை பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தனவிடம் வலியுறுத்தியிருந்ததாக திமுக ஆதரவாளர் மா.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை அரசாங்கம் அதனை செயற்படுத்தாது, மாறாக இனம், மதம் மற்றும் அரசியல் முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தியமையே இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள விளைவுக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக இருந்தன.

அன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் வெற்றிபெற்றிருந்தால், தமிழர்கள் என்ற வகையில் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியபோது, மேலும் பல விமானங்கள் அவர்களிடம் இருக்கலாம் என்ற எண்ணமே தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருந்தது. 

எனினும் எதிரியான இலங்கை அரசாங்கம், சர்வதேசத்துடன் இணைந்து செயற்படும் நிலையில் அதன் பலத்தை குறை மதிப்பீடு செய்தமையே தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்விக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

இவ்வாறுஇருக்கையில், அந்த அமைப்பை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் குறிப்பாக சீமான் போன்றவர்கள் கூறுகின்ற கருத்துக்கள், பொய்யானவை மற்றும் நடைமுறை சாத்தியமற்றவையாகும்.

சீமானை விட கோபாலசுவாமி மற்றும் கொளத்தூர் மணி மதுரை நெடுமாறன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தனர். 

அத்தோடு அவர்கள் கூட சீமானைப் போன்று விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதில்லை. 

இவ்வாறுஇருக்கையில் பிரபாகரனை தலைவராக கூறிக்கொண்டு தாம் ஆட்சிக்கு வந்தால், கச்சதீவை மீட்டு வருவேன் என்பது போன்ற விடயங்களை சீமான் கூறுவது, ஒரு மாநில அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரங்களை பற்றி தெரியாத நிலையில் கூறும் கருத்துக்களாகும். 

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தனிப்பட்ட ரீதியாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாரிய உதவிகளை செய்து வந்தார். அதிலும் பொருளுதவிகளை செய்து வந்தார்.

இதன் காரணமாக இயல்பாகவே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு திராவிட முன்னேற்றக்கழகம் எதிரானது என்ற கருத்துக்கள் நிலவின.

அதேநேரம், திராவிட முன்னேற்றக்கழகம், தமிழீழ விடுதலைப்புலிகளை தவிர்ந்த ஏனைய அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தபோதும், அந்த அமைப்புக்களுக்கு பெரிதாக உதவிகளை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.  

எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதா, இலங்கையின் தமிழ் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தபோதும் இறுதிக்காலக்கட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்தார் என மா.அன்பழகன் மேலும் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top