'லியோ' படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து தற்போது 'G.O.A.T' படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது இப்படம். தற்போது முழு வீச்சில் 'G.O.A.T' படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இப்படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்தார். இரண்டாவது முறையாக இந்த காம்போ கோலிவுட் வட்டாரத்திலே மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்தது. ஆனால் படம் ரிலீசான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலில் எந்த குறையும் வைக்காமல், பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது 'லியோ'இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்தார் விஜய். யாருமே எதிர்பாராத விதமாக இந்த காம்போ இணைந்தது கோலிவுட் திரையுலகினர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவில் ஜாலியான படங்களை இயக்கி வரும் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தினை கொடுத்திருந்தார். இன்றளவும் ஏகே ரசிகர்களின் பேவரைட் படமாக 'மங்காத்தா' திகழ்கிறது.
இதனையடுத்து தளபதியை வைத்தும் 'மங்காத்தா' போன்று தரமான ஒரு படத்தை கொடுக்குமாறு வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தற்போது 'G.O.A.T' படத்தினை டைம் டிராவல் பாணியில் வெங்கட் பிரபு இயக்கி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் விஜய் இப்படத்தில் அப்பா, மகனாக இரண்டு விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார். கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படத்தின் போஸ்டர் வாயிலாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு 'G.O.A.T' படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மிலிட்டரி பேக்கிரவுண்ட்டில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மலுடன் துப்பாக்கியுடன் விஜய் இருப்பதை போன்ற மிரட்டலான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கன்னுடன் நின்றாலும் நால்வரும் ஜாலியாக சிரித்தபடி இருக்கின்றனர்.