அரச பரிசுகளை விற்றதாக மற்றுமொரு குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 வருட சிறைத் தண்டனைன விதிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவியான புஷ்ரா பீபிக்கும் 14 வருட சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான் பிரதமராக இருந்த வேளையில் பெற்ற அரச பரிசுப் பொருட்களை தங்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக விற்றதாக அல்லது வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த பரிசுகளில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரிடமிருந்து கிடைத்த ஒரு நகைத் தொகுதியொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 14 வருட சிறைத்தண்டனையுடன், சுமார் 1.5 பில்லியன் பாகிஸ்தான் ரூபா (5.3 மில்லியன் டொலர்) அபராதமும் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இம்ரான் கான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, கடந்த 2018 இல் புஷ்ரா பீபியை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 2023 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இம்ரான் கானுக்கு, அரச இரகசியங்களை கசிய விட்ட குற்றச்சாட்டில் 10 வருடன சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இம்ரான் கான், அரசியல் காரணங்களுக்காக தம் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றார்.
எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த வழக்குகள் யாவும் போலியானவை என, மிக அவசர அவசரமாக வற்புறுத்தலின் பேரில் விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, இம்ரான் கானும் அவரது PTI கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், இந்த தண்டனை மூலம், இம்ரான் கான் அரச பதவி ஒன்றை வகிப்பதிலிருந்து 10 வருடங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, இம்ரான் கானின் X (ட்விட்டர்) கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில், “பெப்ரவரி 08 ஆம் திகதி உங்கள் வாக்கு மூலம் ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான இம்ரான் கானும் அவரது கட்சியும் எந்த அளவிற்கு ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பதன் அடிப்படையில், எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின் நம்பகத்தன்மை குறித்து பலரும் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.