இலங்கை லிற்ரோ காஸ் லங்கா லிமிடட் நிறுவனம் தனது பிரதான பங்குதாரரான இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தின் ஊடாக 3 பில்லியன் ரூபா (3,000 மில்லியன்) பங்கு இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிப் பாரிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளது. இது 2023 ஒக்டோபர் மாதம் வழங்கிய 1.5 பில்லியன் ரூபா பங்களிப்பு மற்றும் 2024 ஜனவரி 26ஆம் திகதி வழங்கிய 1.5 பில்லியன் ரூபா பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
நோய் தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்தன பொருளாதார பின்னடைவு போன்றவற்றின் பின்விளைவுகளிலிருந்து மீண்டு ஸ்திரத்தன்மையை அடைய அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்கு முயற்சிக்கும் முக்கியமான நேரத்தில் இது குறிப்பிடத்தக்கதொரு சிறந்த சமிக்ஞையாக அமைந்துள்ளது.
இலாபமீட்டும் சில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்று என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 2.6 பில்லியன் ரூபாவை வரியாகச் செலுத்தியுள்ள லிற்ரோ நிறுவனம் நாட்டை வலுப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டியுள்ளது. அந்நியச்செலாவணிக் கையிருப்புத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் விநியோகச்சங்கிலி பாதிப்புப் போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தபோதும் தலைவர் முதித பீரிஸின் தலைமைத்துவத்தின் கீழ் இப்பிரச்சினைகளை விரிவாக தீர்த்துக்கொள்ள முடிந்தது.
இது தொடர்பில் தனது திருப்தியை வெளிப்படுத்திய தலைவர் முதித பீரிஸ் குறிப்பிடுகையில், ‘பொருளாதார சவால்கள் மற்றும் கஷ்டங்கள் காணப்பட்டாலும் 2023/ 24 நிதியாண்டில் லிற்ரோ நிறுவனத்தினால் இலாபமீட்ட முடிந்தது என்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
எமது வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் திரவப்படுத்தப்பட்ட பெற்றோலிய வாயு கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேநேரம், எதிர்வரும் நிதியாண்டுகளில் கிராமப்புறத் துறைக்கும் எமது அடைவு எல்லையை விரிவுபடுத்தவுள்ளோம்” என்றார்.
பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான மாற்றீடாக திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவுக்கு மாறுவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் நிறுவனத்தின் அறிவூட்டல் முயற்சிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் தொடர்பான நிறுவனத்தின் பல்வேறு நோக்கங்கள் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.