அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ‘இன்டியூட்டிவ் மெஷின்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்து அனுப்பிய விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவில் மீண்டும் தரையிறங்கியுள்ளது. இந்த முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்று வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘அடிசியஸ்’ என்றழைக்கப்படும் நிலவில் தரையிறங்கிய (லேண்டர்) விண்கலக் கருவி, நேற்று இந்த மைல்கல்லை எட்டியது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இயங்கி வரும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசாவின் உதவியுடன் ஒடிஸியஸ் என்ற விண்கலத்தை அனுப்பி நிலவின் தென் துருவம் அருகே தரையிறங்கியுள்ளது.
இந்த நிறுவனமும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் வணிக விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
எதிர்காலத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கத்தில் இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தானியக்க முறையில் ‘லேண்டர்’ தரையிறங்கும் முயற்சியில் இடையூறுகள் வந்தபோது, பூமியிலிருந்து கிட்டத்தட்ட 384,000 கிலோமீற்றர் தொலைவில் இருந்த அக்கருவி இயக்கப்பட்டது.
கடைசியாக 1972இல் அமெரிக்காவின் அப்போலோ 17 விண்கலம் நிலவில் கால்பதித்தது. ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியுள்ளன.
இதற்கு முன்னதாக அமெரிக்கா, சோவியட் ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் தனியார் நிறுவனம் தற்போது நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2030ஆம் ஆண்டுக்குள் மனிதனை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்திற்கு பாதை வகுப்பது இத்தகைய முயற்சிகளின் நோக்கமாகும்.