நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் உள்வாங்கி வளர்வதில் தமிழ் மொழி என்றும் தனித்து நிற்கும். அந்த வகையில் ‘திருக்குறள் ஏஐ’ பாட் அறிமுகமாகி உள்ளது. இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சலுக்கு ஏற்ப திருக்குறள் ஜெனரேட்டிவ் ஏஐ பாட் உருவில் அவதரித்துள்ளது என இதனை குறிப்பிடலாம்.
அந்த வகையில் திருக்குறள் ஏஐ பாட் மூலம் வள்ளுவரின் 1,330 குறளையும் பயனர்கள் பெறலாம். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என வள்ளுவர் எழுதிய முப்பாலிலும் உள்ள 133 அதிகாரங்களில் உள்ள அனைத்து குறள் மற்றும் அதற்கான பொருள் விளக்கத்தை இதில் உள்ள குறள் பட்டியல் மூலம் பயனர்கள் பெறலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, பரிமேலழகர், சாலமன் பாப்பையா மற்றும் மு.வரதராசனார் ஆகியோரது பொருள் விளக்கம் ஒவ்வொரு குறளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.