பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் சிறை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அதிகமான ஆசனங்களை வென்று முன்னிலை பெற்றுள்ளனர்.
எனினும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலை அடுத்து கைபேசி சேவைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் அசாதாரணமான வகையில் தாமதம் நீடித்து வந்தது.
நேற்று பின்னேரம் வரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி இம்ரான் கானுடன் தொடர்புபட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 146 ஆசனங்களில் 60 இடங்களை வென்றிருந்தனர். மொத்தம் 265 ஆசனங்களுக்காகவே தேர்தல் இடம்பெற்றது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சி 43 இடங்களை வென்றிருப்பதோடு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 37 இடங்களை வென்றிருந்தது.
இம்ரான் கான் சிறை வைக்கப்பட்டதோடு அவரது பாகிஸ்தான் தஹ்ரீக்கே இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகவே இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாக தாமதிப்பது வழக்கத்திற்கு மாறானதாகும்.இந்த நிச்சமற்ற நிலையில் கராச்சியின் பங்குச் சந்தை மற்றும் இறைமை பிணைமுறிகள் வீழ்ச்சி கண்டுள்ளன.
“இணையதள பிரச்சினை” ஒன்றே முடிவுகள் தாமதிப்பதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட செயலாளர் சபர் இக்பால் தெரிவித்துள்ளார்.
தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக கைபேசி சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக அரசு வியாழக்கிழமை கூறியிருந்தது. அது பகுதி அளவு மீண்டுள்ளது.
இதில் கடந்த முறை தேர்தலில் வெற்றியீட்டி தற்போது சிறை அனுபவிக்கும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் மற்றும் நவாஸ் ஷரீப் கட்சிக்கு இடையிலேயே போட்டி நிலவியது.
தனது கட்சியை ஒடுக்கியதில் நாட்டின் சக்திவாய்ந்த இராணுவம் பின்னணியில் இருப்பதாக இம்ரான் கான் நம்புகிறார்.
மறுபுறம் நவாஸ் ஷரீபுக்கு இராணுவம் ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.