தென்னை ஓலையால் வேயப்பட்ட வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று (23) இரவு, ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவல்கெலே பகுதியில் உள்ள குறித்த வீட்டில் தனது கணவருடன் வசித்து வந்த 65 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வீடு தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடு தீப்பற்றிய வேளையில், தீயை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்ற போதிலும், அவர்களால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என, பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள ஆராச்சிக்கட்டு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.