கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணலகழ்வு தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
குறித்த பகுதியில் மணல் மாபியாக்களால் கனரக வாகனம் கொண்டு அச்சம் இல்லாது சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்து அமைச்சர் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.இந்த நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று (31) பிற்பகல் சென்ற கண்டாவளை பிரதேச செயலாளர் கள நிலைமைகளை கண்காணித்ததுடன், சம்பவம் தொடர்பில் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கிராம சேவையாளர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
சட்ட விரோத மணல் அகழ்வுக்கு 10 நாட்களுக்குள் நிரந்தர தீர்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்று தருவதாக கூறியுள்ள நிலையில், தற்பொழுது இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த பகுதி இரணைமடு குளத்தின் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை மிக அண்மித்து காணப்படுவதால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அனர்த்தங்களையும், பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பனை அபிவிருத்தி கூட்டுறவு சபையால் அமைக்கப்பட்ட சுற்றுமதிலும் இதனால் பாதிக்கப்பட்டு விழுந்துள்ளதாக அதன் பணியாளர் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் மற்றும் இடர் ஏற்படும் வகையில் அபாயகரமாக உள்ள குறித்த பகுதியை பாதுகாக்க அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும் என கண்டாவளை பிரதேச மக்களும், விவசாயிகளும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.