மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் வீதியில் நடந்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே மனைவியின் தலையை வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
ஃபேதபூர் கோட்வாலி பாஸ்ரகா என்ற கிராமத்தில் அனில்- வந்தனா தம்பதி வசித்து வந்தனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், வீட்டில் காதல் கடிதம் ஒன்று கிடப்பதை கண்ட அனில், தனது மனைவி வந்தனாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த அனில், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் வேலைக்கு சென்ற அனில், சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். மனைவி வந்தனாவை அறைக்கு அழைத்து, கூரிய ஆயுதத்தால் அவரது தலையை கணவர் அனில் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
வந்தனா கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, இரத்தக் கறையுடன் நின்று கொண்டிருந்த அனிலை கண்டு பயந்தோடினர்.
ஒரு கையில் மனைவியின் தலையையும், மறு கையில் ஆயுதத்துடன் பொலிஸ் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
தகவலறிந்து சென்ற பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.