இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை என தான் வெளியிட்ட கருத்து தொடர்பில், நாடாளுமன்றத்துக்குள் முன்வைக்கப்படும் கருத்துக்கள் கவலையளிப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரிண் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஹரிண் பெர்ணான்டோ கருத்து வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியமை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே, ஹரிண் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கைக்கு தற்போது இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என நான் இந்தியாவில் கூறியதை அரசியலமைப்புக்கேற்ப தவறானது என வெளிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் நான் கவலையடைகிறேன். இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவுகளுக்கு நான் நன்றி தெரிவித்தேன்.
இதன் போது, இந்தியாவுடன் இலங்கை கொண்டுள்ள தொடர்பு குறித்து நான் விவரித்து பேசினேன்.
கேரளா உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளில் இலங்கையில் பேசப்படும் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என நான் கூறினேன்.
என்னால் இலங்கையை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியாது. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது, இந்தியா எமக்கு உதவியது.
இதனை தொடர்ந்தும் பல ஆதரவுகளை இந்தியா எமக்கு வழங்கி வருகிறது.
இந்தியா இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதும், இலங்கையை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் இரு வேறு விடயங்கள்.
அத்தோடு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாம் அனைத்து நாடுகளையும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்போம்” என தெரிவித்துள்ளார்.