ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று (28) காலை 7.50 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும் அவர் கோமா நிலைக்கு சென்ற நிலையில் இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன் ஈழத்தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
பல முயற்சிகளின் கீழ் இலங்கை வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வாழும் சாந்தனின் தாய், அவரின் வருகைக்காக 32 வருடங்களாக காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.