உலகின் பெரும் செல்வந்தரான இலொன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் தனது கம்பியில்லா மூளை சிப்புகளில் ஒன்றை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட முடிவுகளில் இந்த சிப்பில் இருந்து நம்பிக்கைதரும் நரம்புத் தூண்டல்கள் அவதானிக்கப்பட்டிருப்பதோடு நோயாளி சிறந்த முறையில் மீண்டு வருவதாக மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் மனித மூளைகளில் இருந்து கணினிக்கு தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வதோடு அது சிக்கலான நரம்பியல் நிலைகளை கண்டறிய உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் பல போட்டி நிறுவனங்களும் இதனையொத்த கருவிகளை ஏற்கனவே மனித உடலில் பொருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை, நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள கடந்த மே மாதம் அனுமதி அளித்திருந்தது.