அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு ஒரு நிதிக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் பொருளாதாரமும் வலுவாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு கணிசமான அதிகாரம் உள்ளது. கடந்த காலத்தில் இலங்கையில் கருத்தாடலுக்கு உட்பட்ட பரேட்டா சட்டம் பற்றி குறிப்பிடுவதென்றால், இவ்விடயத்தில் மத்திய வங்கி, நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் மாத்திரமே கவனம் செலுத்தியது.
நாட்டின் கையிருப்பு நிலை குறித்து மத்திய வங்கி கவனம் செலுத்தியதா என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். மேலும், விவசாயத் துறை 22 வீதம் – 8 வீதம் வரையிலும், தொழில் துறை 38 வீதம் – 32 வீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளமைக் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 17 முறை கடன் பெற வேண்டியிருந்தது. அவ்வாறு செய்தாலும் பொருளாதாரத்தை மீட்க முடியவில்லை. நாம் பொருளாதாரத்தில், சேவைத் துறையை தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளோம். தொழில் துறை மீது காட்டப்பட்ட அலட்சியத்தால், உற்பத்தித் திறன் குறைந்துள்ளது.
இரண்டு அரச வங்கிகளினால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 602 பில்லியன் ரூபாவாகும். அதில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக தள்ளுபடி செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடன் தொகையை நம் நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் பயன்படுத்த முடிந்திருந்தால், அந்தத் துறைகளில் பெரும் வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கும். நாட்டில் நிதிக் கட்டுப்பாடு இல்லாததால்தான் இத்தகைய நிலை ஏற்பட்டது.
இங்கு வர்த்தகர்களும், நிதி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்காத வகையில் செயல்பட வேண்டும். அதன்படி, பரேட்டா சட்டத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, பாராளுமன்றத்தில் சில திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம் என்றார்.