புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் டெனிஸ்ரன் கீர்த்தனா என்ற இளம் 29 வயதுடைய குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் பங்குனி 5ஆம் திகதி மரண விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படும் எனவும், இவ் மரணம் தொடர்பில் யாரும் சாட்சி சொல்ல விரும்பினால் நீதிமன்றத்திற்கு வருகை தந்து சாட்சியம் அளிக்கலாம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் அவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் மரண பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.